Saturday, March 28, 2009

அணையா தீ...


தீயில் எரிந்து கொண்டிருக்கிறது என் உலகம்...
எந்த திரியிலிருந்து பற்றியிருக்கும் என தெரியவில்லை.
நேற்று கூட பசுமையாய் பார்த்த ஞாபகம்..
பின் எப்படி இப்படி நடந்திருக்கும்...

தீயை அணைக்காமல் ஏன் யோசிக்கிறேன்...
உலகமே எரியும்போதும் என்ன செய்து கொண்டிருக்கிறேன்..
ஏன் அணைக்கும் வழியை யோசிக்காமல்...
எரியும் காரணத்தை யோசிக்கிறேன்?...

ஏதாவது செய்ய வேண்டும்....
முழுவதும் எரிவதற்குள் ஏதேனும் செய்ய வேண்டும்.
தண்ணீர் கொண்டு அணைக்க தோன்ற...
கடல் தேடி ஓடுகிறேன்...

போகும் பாதை முழுவதும் நெருப்பு...
தண்ணீர் தேடி ஓடும்போதும்...
மனதின் மூலையில் இன்னும் தேடுகிறேன்...
பற்றி எரியும் காரணத்தை...

தேடி தேடி களைத்துவிட்டேன்..
மெல்ல சோர்ந்து அமர்ந்துவிட்டேன்.
நான்கு பக்கமும் நெருப்பு சூழ...
இனி தண்ணீர் தேடி பயனில்லை.

என்னவாயிற்று ஏன் உலகத்திற்கு...
ஏன் மனிதர்கள் யாருமே காணவில்லை...
பற்றி எரியும் நெருப்பின் நடுவே...
தனியே என்னை விட்டு விட்டு...
எப்படி போக மனம் வந்தது.

என் நினைவு பக்கங்களை புரட்டி பார்த்தும்..
ஏதும் புரிபட மறுக்கிறதே...
நந்தவனம் போல் இருந்த உலகம்...
எரியும் காரணம் புரியாமல் தவிக்கிறேன்.

தீயின் நாக்குகள் பூக்களை நோக்கியும் பாய்கிறது...
கண்கள் இரண்டிலும் வழியும் கண்ணீருடன்..
ஓலமிட்டபடி தீயில் பாய்கிறேன்...
பற்றியதன் காரணம் தெரியாமலே நானும் எரிகிறேன்...

காலை எழுந்ததும் அம்மா கேட்கிறாள்...
தூக்கத்தில் அலறியதின் காரணம் என்னவென்று...
கனவு என்கிறேன்... விளக்கம் கேட்பவளிடம் என்ன சொல்ல...

கனவின் மிச்சமாய்...
கன்னத்தில் இன்னும் மீதமிருக்கிறது...
பூக்களுக்காய் விட்ட கண்ணீரின் தடம்...

No comments:

Post a Comment